articles

img

ஏழைக்கு வயிறு எதற்கு? -க. கனகராஜ்

ஒன்றிய அரசு மோடி ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பிறகு உணவு, எரிபொருள் மற்றும் உர மானியங்களை தொடர்ச்சியாக வெட்டிச் சுருக்கிக் கொண்டே வருகிறது. 2022-23ஆம் ஆண்டில் ரூ.2.51 லட்சம் கோடியாக இருந்த உர மானியம், கடந்த ஆண்டு ரூ.1.89 லட்சம் கோடியாகவும், தற்போது ரூ.1.64 லட்சம் கோடியாகவும் வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று, எரிபொருள் மானியம் சிறுக, சிறுக குறைக்கப்பட்டு தற்போது 11 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

 உணவு மானியத்தைப் பொறுத்தவரை 2022ம் ஆண்டு ரூ.2.89 லட்சம் கோடியாக இருந்தது. அதற்கு அடுத்த ஆண்டு ரூ.2.73 லட்சம் கோடியாக்கப்பட்டு கடந்த ஆண்டில் ரூ.2.12 லட்சம் கோடியாக இருந்தது தற்போது ரூ.2.05 லட்சம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த நான்காண்டுகளில் ரூ. 84 ஆயிரம் கோடி அதாவது 29.07 சதவிகிதம் உணவு மானியம் வெட்டி குறைக்கப்பட்டுள்ளது. 

வெற்றுத் தம்பட்டம்

இத்தனைக்கும் ஒன்றிய அரசாங்கம் பிரதம மந்திரி காரீப் கல்யாண் யோஜனாவின் மூலம் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் ஒவ்வொருவருக்கும் 5 கிலோ அரிசியோ, கோதுமையோ இலவசமாக கொடுப்பதாகவும், அதனால் 5 ஆண்டுகளுக்கு கூடுதலாக ரூ. 11 லட்சம் கோடி ஒன்றிய அரசுக்கு இழப்பு ஏற்படும் என்றும் தனது ‘தாராள குணம்’ குறித்து தம்பட்டம் அடித்துக் கொண்டுள்ளது. ஆயினும், உணவு மானியம் ஆண்டுக்காண்டு குறைக்கப்படுகிறது என்றால் உணவு மானியத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் அதிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள் என்று பொருள்.

உணவுப் பணவீக்கம் கடும் அதிகரிப்பு

நுகர்வோர் விலை குறியீட்டெண்ணில் 40 சதவிகிதம் உணவுப் பொருட்கள் சார்ந்தது. உணவுப்பொருட்கள், காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பயறு வகைகள் ஆகியவற்றின் விலை சமீப காலங்களில் மிகப் பெரிய அளவிற்கு உயர்ந்து 10 சதவிகிதம் அளவிற்கு வந்துள்ளது. இதைத்தான் உணவுப்பொருள் பண வீக்கம் என்கிறார்கள். இது சாதாரண மக்களின் வாழ்வில் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்குகிறது.

2000 முதல் 2006ம் ஆண்டு வரை உணவுப்பொருள் பண வீக்கம் 2.5 சதவிகிதம் அளவிற்கு இருந்ததாகவும் அதனால் அந்த காலத்தில் உணவுப் பொருட்களின் விலை மிகப்பெரிய அளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் இருந்ததாகவும் கூறுகிறார்கள். ஆனால், சமீப காலத்தில் உணவுப்பொருள் பண வீக்கம் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உச்சத்திலும் இருக்கிறது. இந்தப் பின்னணியில் உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதற்கு ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை உரிய கவனம் செலுத்தியிருக்க வேண்டும். மாறாக, உணவுக்கான மானியத்தை வெட்டிச் சுருக்கியிருக்கிறது. 

அரிசி விலையும்   அராஜக முடிவுகளும்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்திற்கும் முன்னுரிமை குடும்ப அட்டைகளுக்கும் மானிய விலையில் அரிசி அளிக்கப்பட்டு வந்தது. அதேசமயம், முன்னுரிமையற்ற அட்டைதாரர்களுக்கும் மாநில அரசின் இதர திட்டங்களுக்குமான அரிசியை இந்திய உணவுக் கழகத்திடமிருந்து அந்த கழகம் நிர்ணயிக்கும் விலையில் மாநில அரசுகள் அரிசியை கொள்முதல் செய்து வந்தன. ஆனால், மோடி அரசாங்கம் அதற்கு தடை விதித்து ஓப்பன் மார்க்கெட் சேல்ஸ் ஸ்கீம் என்ற ஒரு அநீதியை புகுத்தியது. இதன்படி, தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே அந்த அரிசி விற்கப்படும். அதாவது, மாநில அரசாங்கங்கள் தங்கள் கூடுதல் தேவைகளுக்காக உணவுக் கழகத்திடமிருந்து அரிசியை கொள்முதல் செய்ய முடியாது. அதேபோன்று, உணவுக் கழகத்திடம் கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்களும் மாநில அரசுகளுக்கு அந்த அரிசியை விற்கக் கூடாது என்று தடையும் விதித்து விட்டது. வேறு வழியில்லாமல் மாநிலங்கள் வெளி மார்க்கெட்டில் கொள்முதல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தமிழ்நாடு போன்ற மாநிலங்கள்  தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் கொள்முதல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டன. அதாவது, ஓப்பன் மார்க்கெட் சேல்ஸ் ஸ்கீமில் ஒரு கிலோ 29 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் அதே அரிசியை தேசிய நுகர்வோர் கூட்டமைப்பின் மூலம் ஒரு கிலோ ரூ. 35.40க்கு வாங்க மாநில அரசுகள் நிர்ப்பந்திக்கப்பட்டன. ஏற்றுமதி செய்யப்படுவதற்கு ஒரு கிலோ அரிசி ரூ. 27/-க்கும், ஏறத்தாழ அதே விலைக்கு எத்தனால் தயாரிப்பதற்கும் கொடுக்கப்பட்ட நிலையில், உணவுக்காக மாநில அரசுகள் வாங்கும் அரிசியின் விலை ஏறத்தாழ 5 முதல் 6 ரூபாய் அதிகம் கொடுத்து வாங்கும் நிலை இருக்கிறது. இந்த ஆண்டு இந்த விலையையும் ரூ. 35.40/-லிருந்து ரூ. 37.70/- ஆக உயர்த்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழ்நாடு போன்ற மாநிலங்கள், முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளுக்கு விநியோகிப்பதற்காகவும் ஒரு நபருக்கு 5 கிலோ மட்டும் ஒன்றிய அரசின் திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசாங்கம் ஒரு நபர் அட்டைக்கு கூடுதலாக வழங்கும் இரண்டு கிலோ, இரு நபர் அட்டைக்கு கூடுதலாக வழங்கும் 6 கிலோ, மூன்று நபர் அட்டைக்கு கூடுதலாக வழங்கும் 5 கிலோ ஆகியவற்றிற்கும் வெளிச்சந்தையில் தற்போது 35.40 ரூபாய்க்கும் எதிர்காலத்தில் உயர்த்தப்படும் 37.70 ரூபாய்க்கும் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இதற்கென ஏறத்தாழ மாதம் 65 ஆயிரம் டன் அரிசியை மாநில அரசு இப்படி கூடுதல் விலைக்கு வாங்க வேண்டியிருக்கும். இதுபோக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு தேவைப்படும் அரிசியும் வெளி மார்க்கெட்டில் தான் வாங்க வேண்டிய நிலை உள்ளது. ஏற்றுமதிக்கும், எத்தனால் தயாரிப்புக்கும் குறைந்த விலைக்கு விற்கிற ஒன்றிய அரசாங்கம், அட்டைதாரர்களுக்கும், ஏழை மாணவர்களின் உணவுக்கும் கூடுதல் விலையில் வாங்க நிர்பந்திப்பது அநீதியின் உச்சம்.

வீழும் உண்மை ஊதியம்

இந்த காலத்தில் வரலாறு காணாத வகையில் ஊதியத்தின் உண்மை மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. கீழ் மட்டத்தில் உள்ள 20 சதவிகிதம் பேரின் வருமானம் கடந்த 5 ஆண்டுகளில் 50 சதவிகிதம் அளவிற்கு குறைந்திருக்கிறது. சேமிப்பும் குறைந்திருக்கிறது. இந்நிலையில் கிராமப்புற வேலை வாய்ப்புக்கு ஆதாரமாக விளங்கும் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஒதுக்கீடு இந்த ஆண்டும் அதே ரூ. 86 ஆயிரம் கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டிற்கு முந்தைய ஆண்டு இது ரூ.98ஆயிரம் கோடியாக இருந்தது. பிரச்சனை என்னவென்றால் கடந்த 4 மாதத்தில் இந்த தொகையில் ஏறத்தாழ பாதி - 41,500 கோடி ரூபாய் ஏற்கனவே செலவழிக்கப்பட்டு விட்டது. அடுத்த 8 மாத காலத்திற்கு 44,500 கோடி ரூபாய் தான் இருக்கிறது. எனவே, கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டமும் போதுமான அளவிற்கு கை கொடுக்கப்போவதில்லை.

கார்ப்பரேட் அரசு

சமீபத்தில் நடந்த ஜி20 நாடுகளின் கூட்டத்தில் செல்வ வரி விதிக்க வேண்டும் என்கிற விவாதத்தை பிரேசில் எழுப்பியிருக்கிறது. உலகம் முழுவதும் ஏழை, பணக்காரர் இடைவெளி அதிகரித்து அசமத்துவம் உயர்வதை தடுக்க இதுபோன்ற வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று  வலியுறுத்தியிருக்கிறது. இந்த நிலையில் தான் அரிசிக்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் இந்தியா, உணவுக்கான மானியத்தை வெட்டியதோடு ஏழைகளுக்கான எந்த வரிச்சலுகைகளையும் காட்டாமல் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி விகிதத்தில் 5 சதவிகிதம் குறைத்திருக்கிறது. 

மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் அனைவருக்குமான அரசாங்கமாக இல்லாமல் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதற்கான தன்னுடைய திட்டத்தை எவ்வித ஒளிவுமறைவும் இல்லாமல் வெளிப்படையாக அறிவித்திருக்கிறது. 

இதை தடுத்து நிறுத்துவதற்கு மக்களின் உணர்வுப்பூர்வமான, வீரியமான போராட்டங்கள் காலத்தின் கட்டாயம்.

க. கனகராஜ்
மாநில செயற்குழு உறுப்பினர் - சிபிஐ (எம்)

 

பட்டினிக் கொடூரத்திற்கு பதில் சொல்லுங்கள்! 

இந்த காலத்தில் இந்தியா உலக பட்டினிக் குறியீட்டில் 104, 107, 111 (2023) என்று 125 நாடுகள் பட்டியலில் ஆண்டுக்காண்டு கீழே சென்று கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், உலக வங்கி கணக்கு படி இந்தியாவில் ஒவ்வொரு நாளும் இரவு உணவுக்கு வழியின்றி பட்டினி வயிறோடு தூங்கச் செல்வோர் எண்ணிக்கை 19 கோடி.  இந்திய மக்களில் 11 சதவிகிதம் பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள். ஒவ்வொரு 200 பேருக்கும் 71 பேர் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 15 வயதிலிருந்து 49 வயது வரையிலான பெண்கள் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ள விகிதம் ஆண்டுக்காண்டு அதிகரித்தே வருகிறது. 2019-2021ம் ஆண்டில் இது 58 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. அதாவது, பெண்களில் மூன்றில் இரண்டு பங்குக்கு சற்று குறைவானவர்கள் ரத்த சோகை மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 100க்கு 17 பேர் தங்கள் வயதுக்கேற்ற உயரத்தோடு இல்லை.   5 வயதிற்குட்பட்ட 18.7 சதவிகிதம் குழந்தை கள் தங்கள் வயதுக்கேற்ற எடையோடு இல்லை.  அதாவது, 5 வயதிற்குட்பட்ட 35.7 சதவிகிதம் குழந்தைகள் தங்கள் வயதுக்கேற்ற எடையோ,  உயரமோ அல்லது இரண்டுமே இல்லாதவர் களாக இருக்கிறார்கள் என்று பொருள்.

தங்கத் தட்டில் 3.75 லட்சம் கோடி

கடந்த 10 ஆண்டுகளில் விரல்விட்டு எண்ணத் தக்க பெரும் முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட கடன் மட்டும் 17.46 லட்சம் கோடி ரூபாய். அதாவது, ஆண்டுக்கு சராசரியாக 1.746 லட்சம் கோடி ரூபாய். இதேபோன்று, 2019ம்  ஆண்டில் கார்ப்பரேட் வரி 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இதனால் அந்த ஆண்டில் மட்டும்  அரசுக்கு இழப்பு ரூ.1.84 லட்சம் கோடி. தற்போது, இது ரூ.2 லட்சம் கோடியை தாண்டி இருக்கும், பெருமுதலாளிகளுக்கு கடன் தள்ளுபடியும், வரிக்குறைப்பும் ஆக ஆண்டுக்கு ரூ.3.75 லட்சம் கோடியை தங்கத் தட்டில் வைத்து கும்பிட்டுக் கொடுக்கும் அரசுதான், 80 கோடிக்கும் அதிகமான ஏழை மக்களுக்குத் தரும் உணவுக்கான மானியத்தை ஆண்டுக்காண்டு வெட்டிச் சுருக்குகிறது. கடந்த ஆண்டிற்கும், இந்த  ஆண்டிற்கும் இடையில் மட்டும் ரூ. 7000 கோடியை குறைத்திருக்கிறது. மொத்த உணவு மானியம் ரூ.2.05 லட்சம் கோடியாக இருக்கும் போது அதைவிட, 1.8 மடங்கு பணத்தை விரல் விட்டு எண்ணக் கூடியவர்களுக்கு அள்ளி வீசுகிறது மோடியின் பாஜக அரசு. அநீதியின் உச்சம் இது.